இளையோர் திருவிழா

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர் யுவதிகளினதும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளினதும் கலாசார திருவிழா 11.10.2014 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நீராவியடி வீதியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

இவ்விழாவில் பல்வகை கலாச்சார நிகழ்ச்சிகளும் இளைஞர் யுவதிகளினது ஆக்கத்திறன் வெளிப்பாடும் இடம்பெறும். மொழிகள் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சமாதான சகவாழ்வு என்ற கருப்பொருளிலான சித்திரப்போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெறும்.

அத்தோடு நல்லைக்கந்தன் மகோற்சவ காலத்தில் ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்துகலாச்சார கலைநிகழ்ச்சிகளின் போது இடம்பெற்ற அறநெறிப்பாடசாலை மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகளின் இறுவெட்டுத்தொகுப்பும் வெளியிடப்பட இருக்கின்றது.

இந்நிகழ்விற்கு பிரதமஅதிதியாக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்கள் வருகைதர இருக்கின்றார். அத்தோடு பல பேராசிரியர்கள், கல்விமான்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.

வடபகுதியில் நடைபெறுகின்ற பெரும் கலைகலாச்சார விழாவாக இது அமைகின்றது. இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டிற்காகவும் வடகிழக்கிலுள்ள இளைஞர்கள், யுவதிகளினுடைய சமாதானம், சகவாழ்வு, முன்னேற்றம் போன்ற கருப்பொருளில் அமைந்த பல்வேறு கலந்துரையாடல்களும் கடந்த காலங்களில் நடத்தப்பட்டன. இதன் விளைவாகவே இவ் இளைஞர்கள், யுவதிகள் ஒன்றிணைந்து தமது கலாச்சார வெளிப்பாடுகளை நிகழ்த்துவதோடு எதிர்காலத்தில் இணைந்து நாட்டின் அபிவிருத்திக்கு என்ன செய்யலாம் என்ற கருப்பொருளில் கலந்துரையாடலையும் நடத்த இருக்கின்றார்கள். அம்பாறை மாவட்டத்திலிருந்து வருகை தருகின்ற இளைஞர்கள், யுவதிகள் யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் யுவதிகளும் இணைந்து எதிர்காலம் எம் கையில் என்ற செயற்திட்டத்தின் கீழ் தாம் செய்ய இருக்கின்ற செயற்பாடுகள் பற்றி ஆராயவும் இருக்கின்றார்கள்.

அதனைத் தொடர்ந்து யாழ்மாவட்டத்திலுள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பலமத ஸ்தாபனங்கள் வழிபாட்டிடங்கள் போன்றவற்றிற்கும் அவர்கள் விஜயம் செய்ய இருக்கின்றார்கள்.