இயற்கை விவசாயப் பண்ணை

இப்படி ஒரு பண்ணை கடந்த வருடம் நீர்வேலியில் 4 பரப்புக் காணியில் SOND  நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.  இப்பண்ணையில் வாழை, வாழைக்கிடையே கிளிசரியா வேலிகள் ஊடுபயிராகப் போடப்பட்டது.  அத்தோடு பப்பாசி, அன்னாசி, மரக்கறிப்பயிர்வகைகள், அபூர்வமான மூலிகைகள் என்பன நாட்டப்பட்டன. மலைநாட்டில் விளையும் சலாது போன்ற மரக்கறி வகைகளும் நாட்டப்பட்டன. இப்பண்ணையில் மிகக்குறைந்தளவு நீர் பயன்படுத்தப்பட்டது. அயலில் இருக்கின்ற வாழைத்தோட்டங்களிற்கு பாய்ச்சுகின்ற நீரின் கால்ப்பங்கு நீரே இப்பண்ணையில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பண்ணை மிகவும் செழிப்பாகக் காணப்பட்டது.  இப்பண்ணையைப் பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயத்திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள், ஆர்வலர்கள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றார்கள். இப்பண்ணை கடந்த வருடம் வடமாகாண விவசாய அமைச்சர் திரு.ஐங்கரநேசன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லப்பைப் பண்ணை

தற்போது புதிய பண்ணையொன்று பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல்லப்பை என்ற இடத்தில் வல்லிபுரக் கோவிலுக்கு மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பண்ணை சுமார் 10 ஏக்கர் நிலத்தைக் கொண்டது.

இதில் 6 ஏக்கர் நிலம் நெற்காணியும் 4 ஏக்கர் நிலம் மேட்டுக்காணியும் உள்ளது. இங்கு 20 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயமுறையைப்பற்றி விவசாயச்செய்கை ஊடாக பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

இவ் 20 விவசாயிகளுக்கும் வேண்டிய சகல உள்ளீடுகளையும் முதலாம் வருடத்தில் இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திலிருந்து விவசாயிகள் தாமாகவே மூலதனத்தையிட்டு விவசாயத்தை மேற்கொள்ளலாம். இப்பண்ணையில் இவ் 20 விவசாயிகளுக்கும் 40 பரப்புக்காணி வழங்கப்பட இருக்கின்றது.  இதில் ஒரு பரப்புக்காணியில் நெற்செய்கையும் அதனைத் தொடர்ந்து பயிர்ச்செய்கையும் ஏனைய ஒரு பரப்பில் வருடம் பூராவும் மரக்கறிப்பயிர்செய்கையும் இடம்பெறும். இவ்விவசாயிகளினுடைய நடைமுறைகளை மேலும் நூறு விவசாயிகளை அணிதிரட்டி பார்வையிட வைத்து பயிற்சி அளித்து இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்புணர்வூட்டி நஞ்சற்ற விவசாய உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு SOND நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மட்டத்திலும் பல்வேறு நிறுவனங்களுக்கூடாகவும் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பண்ணையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இல்லாத மரக்கறிவகைகள், பழவகைகள், பயிர்வகைகள், மூலிகை வகைகள் என்பன அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இப்பண்ணை வளங்களை உச்சமாகப் பயன்படுத்துவதற்கும் இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதற்கும் வருவாயைப் பெருக்குவதற்குமான ஒரு முன்னுதாரணப் பண்ணையாக திகழுமென்று நம்பப்படுகிறது.

இதற்கான ஆலோசனைகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவசாயபீடம், வடபிராந்திய வடமாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், யாழ்ப்பாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அலுவலகம், புலோலி கமநலசேவை நிலையம் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. விசேட ஆலோசகர்களாக ஏற்கனவே இத்துறையில் ஈடுபட்ட நிபுணர்களை அழைத்து ஆலோசனை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு  இத்திட்டத்தின் ஒரு பகுதி நிதியை சுவிஸ் அபிவிருத்தி நிறுவனம் வழங்கியுள்ளது. இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மக்களுடைய விழிப்புணர்விற்காகவும் மக்களுக்கு ஆரோக்கியமான விவசாய உற்பத்திகளை வழங்குவதற்காகவும் மக்கள் நலனை மேம்படுத்துவதற்காகவும்

முன்மாதிரியாக இப்பண்ணை செயற்படும் என்று நம்பப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்திலும் சொண்ட் நிறுவனத்தால் தங்கவேலாயுதபுரம் என்ற இடத்திலே 6 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த வருடம் இயற்கை விவசாயப்பண்ணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இப்பண்ணையில் பழமரங்கள், நீண்டகாலப்பயிர்களான தென்னை போன்றவை, வாழை, பப்பாசி என்பனவும் நாட்டப்பட்டது. அத்தோடு சோளம், கச்சான் செய்கையும் செய்யப்பட்டது. மரக்கறிப்பயிர்வகைகள் நாட்டப்பட்டன.

நாட்டில் நிலவி வருகின்ற வெப்பநிலையினால் பலபயிர்கள் பாதிப்படைந்திருக்கின்றது. அதேவேளையில் இப்பண்ணையில் குறைந்தளவு நீர்ப்பயன்பாடு, குறைந்தளவு உள்ளீடுகள் என்பனவற்றைக் கொண்டு நஞ்சற்ற உற்பத்திகளை மேற்கொள்ளுமுகமாக இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டது.