பல்லப்பை இயற்கை விவசாயப்பண்ணை

22 7 2015 5

SOND நிறுவனமானது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தும் முகமாகவும் நஞ்சில்லா உணவை உலகிற்கு அளிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தை பரப்பு முகமாகவும் பருத்தித்துறை பல்லப்பை என்ற இடத்தில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாய பண்ணை ஒன்றை உருவாக்கியது.

இதற்கான நிதி உதவியை சுவிஸ் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் வழங்கியிருந்தது.

இத்திட்டத்தின் அடிப்படையில் 10 ஏக்கர் நெற்செய்கை காணியிலும் 2 ஏக்கர் மேட்டுநில பயிர்ச்செய்கை காணியிலும் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 20 விவசாயிகளுக்கு தலா 1 பரப்புவீதம் நெற்செய்கை காணியும் மேட்டுபயிர்ச்செய்கை காணியும் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சகல உள்ளீடுகளும் வழங்கப்பட்டு முறையான பயிற்சியும் வழங்கப்பட்டு அவர்கள் இயற்கை விவசாயத்தை நஞ்சற்ற முறையில் இரசாயனங்கள் பாவிக்காது செயற்படுத்துவதற்குரிய போதுமான வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்பட்டது.

இப்பண்ணையில் 20 இற்கு மேற்பட்ட மரக்கறிபயிர்களும் 15 மூலிகைப்பயிர்களும் 5 பழப்பயிர்களும் நாட்டப்பட்டன. நெல், மரக்கறி என்பன இரசாயனங்கள் பாவிக்காது இயற்கை வளஊக்கிகளையும் பூச்சிகள், நோய்கள் தடுப்பிற்கான இயற்கையில் தயாரிக்கப்பட்ட பூச்சிநாசினிகளும் பயன்படுத்தப்பட்டன.

இப்பண்ணையில் வாழையின் ஊடுபயிராக அன்னாசி, பப்பாசி போன்றவை நாட்டப்பட்டும் கிளிசரியா எல்லா பயிர்களுக்குமிடையே ஊடுபயிராக நாட்டப்பட்டிருக்கிறது. சூழல் வெப்பம் தணித்தல், நீர் முகாமைத்துவம், இயற்கைசக்திகளை பயன்படுத்துதல் போன்ற எண்ணக்கருக்கள் இப்பண்ணையில் அமுல் செய்யப்பட்டன.

சூரியசக்தி மின்கலத்தின் மூலம் நீர் பாய்ச்சப்பட்டது. இதன் மூலம் வருடம் ஒன்றுக்கு 50,000 ரூபாவிற்கு மேற்பட்ட பணம் சேமிக்கப்பட்டது. அத்துடன் மண்ணெண்ணெய் பாவிப்பதால் ஏற்படும் காபன் வெளியேற்றமும் தடுக்கப்பட்டது. இதேபோன்று குறைந்தநீர், குறைந்த கூலியுடன் வெங்காயச் செய்கை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது. சில பயிர்ச்செய்கைகளுக்கு மண்வளமும் உரிய காலநிலையும் பொருத்தமற்ற காரணத்தினால் அது தோல்வியுற்று இருப்பினும் பெரும்பாலான பயிர்ச்செய்கைகள் வெற்றியளித்திருக்கின்றன.

ஊடுபயிர் ஊடாக நிலத்தின் அதியுச்ச பயன்பாடு எடுத்துக்காட்டப்பட்டது. பல்வகை பயிர்களை நாட்டி பரிசீலனை செய்யும் முறைகள் செய்யப்பட்டன. வாழைக்கிடையில் மற்றும் மரக்கறி தாவரங்களுக்கு இடையில் வளரும் புல்லை கட்டுப்படுத்துவதற்கு நிலத்தை இலைகுழைகளை கொண்டு மூடும் முறை செயற்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிலம் சூரியகதிர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டதுடன் புல் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்பட்டது. நிலமும் செழிப்பானது.

அதீத மழைவீழ்ச்சி காரணமாகவும் எதிர் பாராத வெப்பநிலை காரணமாகவும் பல தொற்றுநோய்கள் பயிர் சேதாரங்கள் என்பன ஏற்பட்டிருப்பினும் இப்பண்ணை ஓரளவிற்கு பரீட்சார்த்த வெற்றியை தந்திருக்கின்றது.

இப்பண்ணையின் திறப்புவிழாவிற்கு சுவிஸ் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரியான மார்ட்டின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் செல்வி.நிம்மி நிகழ்ச்சித்திட்ட அதிகாரி திருமதி.தர்சினி ஆகியோர் வருகை தந்திருந்தனர். இந்நிகழ்விற்கு விசேடவிருந்தினராக மாகாண சபை உறுப்பினர் திரு.சயந்தன் அவர்களும் ஓய்வுபெற்ற கோட்டகல்வி அதிகாரி திரு. ரகுநாதன் அவர்களும் ஓய்வுபெற்ற பொறியியலாளர் திரு. யோகேஸ்வரன் அவர்களும் விவசாய விரிவாக்க போதனாசிரியர், கமநலசேவைத் திணைக்கள அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

இந்நிகழ்வின் மூலம் இயற்கை முறை விவசாயச்செய்கை என்பது சாத்தியமென்பதை கலந்துகொண்ட உறுப்பினர்கள் உணர்ந்திருந்தார்கள். யாவருக்கும் பண்ணையை சுற்றி காண்பித்து அங்குள்ள செயன்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

22 7 2015 4 22 7 2015 1

22 7 2015 2 copy 22 7 2015 6