சமூகத்திற்கு பயன்படும் விவசாய முறையே சிறப்பானது.

இயற்கை வளங்களை பாதுகாக்கக்கூடிய விவசாய முறை எமக்கு உகந்தது. மண்ணை, நீரை வளியை மாசுபடுத்தாத இயற்கை விவசாய முறைகள் மனித குலத்திற்கு மிகவும் பயனுள்ளவை என்று சொண்ட் நிறுவனத்தின் புதிய விவசாய முறையிலான பண்ணை ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது வட மாகாண விவசாய அமச்சர் திரு பொ .ஐங்கரநேசன் அவர்கள் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், இரசாயனங்கள் பாவிக்கும் மரக்கறிகளை உட்கொள்ளுகின்ற மனிதர்களுக்கு பல்வகை நோய்கள் ஏற்படுகின்றன. அதே வேளை நிலமும் நீரும் மாசடைகின்றது. இரசாயனங்களை வீசுவதால் வளியும் மாசடைகின்றது. இதன் மூலமாக நீண்ட கால நோக்கில் எமது மனித குலம் வாழுவதற்கு ஒவ்வாத சூழல் உருவாகிக்கொண்டு வருகிறது. இதன் மூலம் மனித குலம் பாதிப்படைகிறது.
நீரை நாம் சேமிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம். விவசாயத்தில் இயற்கை பசளைகளை பாவிப்பதன் மூலமாக செழிப்பான விவசாயத்தைச் செய்ய முடியும் எமது விவசாய முறைகள் மாற்றப்பட வேண்டும். காலத்திற்கேற்ப பொருத்தமான முறைகள் அறிமுகஞ்செய்ய வேண்டும். விவசாயிகளுடைய வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் அதி கூடிய விளைச்சலை தரக்கூடிய விவசாய முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் அதே வேளையில் சூழலுக்கு பாதகமான எதையும் நாம் அறிமுகஞ் செய்ய கூடாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும் தெரிவித்தார்;
இந்நிகழ்வில் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாய பீட மாணவர்கள் அரச சார்பற்ற நிறுவன பிரதிகள் விவசாய துறை நிபுணர்கள் சமூகமளித்திருந்தார்கள் அவர்களுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன் முறையாக வாழைச் செய்கைக்கு சொண்ட் நிறுவன அனுசரணையுடன் சேதன சான்றிதழ் வழங்கும் ஸ்ரீசெட் நிறுவனமும் கொழும்பிலிருந்து வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
இப்பண்ணை ஆரம்ப வைபவத்தை தொடர்ந்து ஏற்கனவே ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வாழை செய்கையாளர்களிடம் வாழை செய்கை முறை பற்றிய பரிசோதனைகளை மேற்கொண்டு முதல் தடைவையாக யாழ்ப்பாணத்திலுள்ள வாழை செய்கையாளர் சிலருக்கு சேதன சான்றிதழ் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள்.
சொண்ட் நிறுவனமானது கிழக்கு மாகாணத்தில் இதே போன்று ஒரு பண்ணையை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது மிக விரைவில் வடமராட்சியிலும் மிக பெரியளவில் இத்தகய பண்ணை ஒன்று உருவாக்கி இதன் மூலம் விவசாயிகளுக்கு நடைமுறை ரீதியான பயிற்சியை வழங்குவதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.